Friday, May 2, 2014


Monday, January 14, 2013

கண்ணீர் பொங்கல்


                                                  

பொங்கல் திருவிழா –அது
தமிழர் திருவிழா
பாரம்பரியத்தில் நிழலாடும்
பண்பாட்டு திருவிழா

இந்த விழாவில்
உலை அரிசி பொங்கும்
மகிழ்ச்சி
மனங்களில் தங்கும்

இன்று எந்த தமிழனுக்கு
மகிழ்ச்சி தங்கியிருக்கிறது
எந்த தமிழன் உலையில்
மகிழ்ச்சி பொங்கல் பொங்கியிருக்கிறது

அணைக்கட்டுகளின் கதவுகள்
அடைந்தே கிடப்பதால்
கண்ணீர் வடிக்க மட்டுமே முடிகிறது
காவிரியால்!

காவிரியின் வரத்தின்றி
காய்ந்து கிடக்கின்றன
பயிர்கள்
கண்ணீர் வடித்தபடி

பயிர்கள் உயிர் விடுவதை
பார்த்து பார்த்து கண்ணீர் வடித்து
உயிர் விட நினைக்கிறான்
தமிழன்.

விதை நெல்லு வட்டிக்கு  வாங்கி
விதைச்சது முளைச்சப்போ
வீழ்ந்து கிடக்குது பயிரு
நிமிர முடியாம

குறுவை சாகுபடியில்
குடி உயரும் என்று
நினைத்தவனுக்கு
தலைகுனிவே தஞ்சமாகிப்போனது

சம்பா சாகுபடியில்
சரிந்து போன பயிர்களைப்போல
தமிழனும்
சரிந்து போனான்

காவிரி வராதவரை
தமிழன் பொங்கினாலும் –அது
இனிப்பு பொங்கலல்ல
கண்ணீர் பொங்கல்

Thursday, January 10, 2013



``சென்னையை சுற்றிப்பார்க்க வந்த வெளிநாட்டுகாரங்ககிட்ட தலைவர் மானத்த வாங்கிட்டார்...’’

``அப்படி என்ன செஞ்சுட்டார்..?’’

``இந்த பில்டிங் எல்லாம் வெள்ளைக்காரங்க கட்டினதுன்னு சொல்லி மொபைல் போன் டவர காட்டறாரு!’’  

kungumam 31-12-12                                                                                                                                            























Thursday, December 20, 2012

தேர்வு


அந்த பிரபல பள்ளிக்கூடத்தில் அடுத்த வருடத்திற்கான சேர்க்கைக்கு இப்பொழுதே தேர்வு நடத்திக்கொண்டிருந்தார்கள். வீட்டு வேலை செய்யும் சரோஜாவும் தனது மகன் ராஜேஷ்சை அழைத்து வந்திருந்தாள். எல்.கே.ஜி தவிர்த்து பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

வீட்டு வேலை செய்யும் சரோஜாவும் தனது மகன் ராஜேஷை அழைத்து வந்திருந்தாள். அவளுக்கு முன்பாகவே வரிசையில் தனது குழந்தையோடு நின்றிருந்தாள் ராகினி, தனது வீட்டில் வேலை செய்யும் சரோஜா அங்கு வந்திருப்பதை ஏளனமாகப் பார்த்தாள்.

எழுத்து தேர்வு முடிந்து பேப்பர் திருத்தப்பட்டு மார்க்கும் கொடுக்கப்பட்டிருந்தது. ராகினியின் மகன் தொண்ணூற்றி எட்டு மதிப்பெண்ணும் சரோஜாவின் மகன் முப்பத்தி இரண்டு மதிப்பெண்ணும் வாங்கியிருந்தார்கள்.

``இந்த ஸ்கூல்ல சேரணுமுன்னா என் மகன மாதிரி நல்ல மார்க் வாங்கணும்!’’ நக்கலாகவே சொன்னாள் ராகினி. சரோஜா அவமானத்தால் நெளிந்தாள். பிரின்சிபால் அதிக மதிப்பெண் வாங்கியவர்களின் பெயர்களை வாசித்தபோது ராகினிக்கு பெருமை தட்டியது.

``இப்ப பேர் படிச்ச குழந்தைங்க கற்பூர புத்தி உள்ளவங்க இவங்க எந்த ஸ்கூல்ல படிச்சாலும் நல்லாத்தான் படிப்பாங்க, ஆனா இந்த ஸ்கூல்ல இப்பிடிப்பட்ட குழந்தைங்களுக்கு அட்மிஷன் கிடையாது, படிப்புல ஆர்வம் இல்லாத கற்றலில் குறைபாடு இருக்கிற குழந்தைங்களுக்கு படிப்பு சொல்லிதந்து அவங்கள புத்திசாலி ஆக்குறதே எங்களோட நோக்கமே!’’

சரோஜாவின் முகத்தில் சட்டென்று சந்தோஷம் வந்தமர ராகினியின் கர்வம் மெல்ல மெல்ல கரையத்தொடங்கியது.

குமுதம் 26-12-12
 
 

அவகாசம்


       
மாலதியை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு பரம திருப்தி. மாப்பிள்ளையும் மாலதியைப்பார்த்து முழு சம்மதத்தோடு பெண்ணை பிடிச்சிருக்கு என்றான்

``நிச்சயதார்த்தம் அடுத்த மாசம் வெச்சுக்கலாம் ஆனா கல்யாணம் ஆறு மாசம் கழிஞ்சுதான் நடத்த முடியும், எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்!’’ என்று  தீர்மானமாகச் சொன்ன மாலதியின் தந்தை விஸ்வநாதனை எல்லோரும் குழப்பமாகப் பார்த்தார்கள்.

``சரியிங்க உங்க இஷ்டம் அப்படியே நடத்தியிடலாம்!’’ மாப்பிள்ளையின் தந்தை சொல்ல மாப்பிள்ளை வீட்டார் மகிழ்ச்சியோடு புறப்பட்டு போனார்கள்.

`ஏங்க எல்லா ஏற்பாடும் ரெடியாத்தான் இருக்கு, சட்டு புட்டுன்னு கல்யாணத்த வைக்காம எதுக்கு ஆறு மாசம் டைம் கேக்கறீங்க..? மாலதியின் அம்மா மெல்ல கேட்டாள்.

``அதுக்கில்லை சுந்தரி, இந்த காலத்துல வயசு பிள்ளையிங்க எல்லாருக்கும்  ஒரு காதல் இருக்கத்தான் செய்யும், வெளியில சொல்லாம இருப்பாங்க, கல்யாணத்தண்ணைக்குட்கூட  ஓடிப்போற ஜோடி உண்டு, பொண்ணயும், இவன் என்ன காதலிச்சுட்டு ஏமாத்தியிட்டான்னு கல்யாண மண்டபத்துல வந்து நிக்கற பொண்ணுங்களும் உண்டு, இப்பிடி ஒரு அவகாசம் குடுத்தா அதுக்குள்ள அவங்க மனசுல உள்ளத வெளிப்படுத்தவும், ஒரு தைரியம் வருமில்லையா அதான் அப்படிச்சொன்னேன்!’’    

      ``அதுவும் சரிதான்!.’’ என்று புன்னகைத்தபடியே நகர்ந்தாள் மாலதியின் அம்மா.

 குங்குமம் 17-12-12

Sunday, December 2, 2012

தேர்வு


பத்தாம் வகுப்பு கணக்கு பாடத்தின் வகுப்பு தேர்வு பேப்பர் திருத்தப்பட்டு வாங்கியதிலிருந்து மதிவதனி ஒரு மாதிரியாகவே இருந்தாள், காரணம் அதில் முப்பது மதிப்பெண்கள் வாங்கி தோற்றிருந்தாள்.

மாலை ஐந்து மணிக்கு பள்ளிக்கூடம் விட்டு எல்லோரும் புறப்பட்டு போனபின்பும் மதிவதனி வீட்டுக்குப்போகாமல் அழுதபடியே நின்றாள்.

``ஏம்மா அழற…?’’ தலைமை ஆசிரியர் நிர்மலா அவள் கரம் பற்றியபடி கேட்டாள்.

``கணக்கு பாடத்துல தோத்துட்டேன் வீட்டுக்குப்போனா அம்மா அடிப்பாங்க..!’’ மறுபடியும் அழுகை வந்து அவள் குரலை அடைத்தது.

``உன் வீட்டு ஃபோன் நம்பர் குடு நான் பேசறேன்!’’’

``அம்மா இங்கதான் டீச்சரா வேல பார்க்கிறாங்க, பேரு ஜமுனா’’ அவள் சொல்லும்பொழுதே ஜமுனா டீச்சர் அங்கு வந்து சேர்ந்தாள்.

``குழந்தையிங்க தேர்வில தோத்துட்டா அடுத்த தேர்வுல ஜெயிச்சுடலாமுன்னு ஆறுதல் சொல்லணும், இத ஒவ்வொரு பெற்றோரும் புரிஞ்சிக்கணும், நீங்க இந்த பள்ளிக்கூடம் வந்தா மட்டும் டீச்சரா இருங்க, வீட்டுக்குப்போனா நல்ல பெற்றோரா இருங்க..!’’ நிர்மலா டீச்சர் சொன்னது நறுக்கென்று கொட்டியதுபோல் வலிக்க ஜமுனா டீச்சரின் தலை குனிந்திருந்தது.

தனது தவறை உணர்ந்து மதிவதனியின் கரம் பற்றி பரிவோடு அழைத்துப்போனாள் ஜமுனா டீச்சர்.

குமுதம் 05-12-2012

Wednesday, November 7, 2012

சண்டை


மாலாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. மாமியார் ஜெயந்தி சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபித்துக்கொண்டாலும் சண்டை எதுவும் பெரிதாய் இதுவரை நடக்கவில்லை.

அன்று மாலை நான்கு மணிக்கு மாலாவுக்கும் ஜெயந்திக்கும் சண்டை பற்றிக்கொண்டது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சண்டை பின்பு அடங்கியது.

மாலாவின் கணவன் கார்த்திக் அலுவலகம் முடிந்து வீடு வந்தபோது வீடு அமைதியாக இருந்தது. பக்கத்து வீட்டு அனுராணிக்கு அது ஏமாற்றமாக இருந்தது.

கார்த்திக் வந்ததும் மாலா தனது நடந்த சண்டையைச்சொல்லி மாமியாரை பற்றி கோள் மூட்டுவாள், அதுபோல ஜெயந்தியும் கார்த்திக்கிடம் மாலாவைப்பற்றி குறை சொல்ல கார்த்திக்கு யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தலையை பிய்த்துக்கொள்வான் என்று எதிர்பார்த்த அனுராணிக்கு மாமியாரும் மருமகளும் சந்தோஷமாக கார்த்திக்கிடம் பேசிக்கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.

மறுநாள் ஜெயந்தியிடம் நேரடியாகவே கேட்டாள் அனுராணி.

``நானும் என் மருமகளும் சண்டை போட்டோம் அத அப்பவே மறந்துட்டோம், அதுவுமில்லாம அத கார்த்திக்கிட்ட நானும் என் மருமளும் சொன்னா அவன் நிம்மதி போயிடும் அதனால சண்டை நடந்ததப்பத்தி  அவன்கிட்ட மூச்சு விடுறதில்ல.’’ சொல்லிவிட்டு தனது மருமகளுக்கு தலைவாரிவிட சீப்புடன் சென்ற ஜெயந்தியை பொறாமையாய் பார்த்தாள் அனுராணி..