Friday, May 2, 2014

தேர்வு (இந்த வார குமுதம் 26-12-12 ல் வெளிவந்த எனது ஒரு பக்கக் கதை)

அந்த பிரபல பள்ளிக்கூடத்தில் அடுத்த வருடத்திற்கான சேர்க்கைக்கு இப்பொழுதே தேர்வு நடத்திக்கொண்டிருந்தார்கள். வீட்டு வேலை செய்யும் சரோஜாவும் தனது மகன் ராஜேஷ்சை அழைத்து வந்திருந்தாள். எல்.கே.ஜி தவிர்த்து பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

வீட்டு வேலை செய்யும் சரோஜாவும் தனது மகன் ராஜேஷை அழைத்து வந்திருந்தாள். அவளுக்கு முன்பாகவே வரிசையில் தனது குழந்தையோடு நின்றிருந்தாள் ராகினி, தனது வீட்டில் வேலை செய்யும் சரோஜா அங்கு வந்திருப்பதை ஏளனமாகப் பார்த்தாள்.

எழுத்து தேர்வு முடிந்து பேப்பர் திருத்தப்பட்டு மார்க்கும் கொடுக்கப்பட்டிருந்தது. ராகினியின் மகன் தொண்ணூற்றி எட்டு மதிப்பெண்ணும் சரோஜாவின் மகன் முப்பத்தி இரண்டு மதிப்பெண்ணும் வாங்கியிருந்தார்கள்.

``இந்த ஸ்கூல்ல சேரணுமுன்னா என் மகன மாதிரி நல்ல மார்க் வாங்கணும்!’’ நக்கலாகவே சொன்னாள் ராகினி. சரோஜா அவமானத்தால் நெளிந்தாள். பிரின்சிபால் அதிக மதிப்பெண் வாங்கியவர்களின் பெயர்களை வாசித்தபோது ராகினிக்கு பெருமை தட்டியது.

``இப்ப பேர் படிச்ச குழந்தைங்க கற்பூர புத்தி உள்ளவங்க இவங்க எந்த ஸ்கூல்ல படிச்சாலும் நல்லாத்தான் படிப்பாங்க, ஆனா இந்த ஸ்கூல்ல இப்பிடிப்பட்ட குழந்தைங்களுக்கு அட்மிஷன் கிடையாது, படிப்புல ஆர்வம் இல்லாத கற்றலில் குறைபாடு இருக்கிற குழந்தைங்களுக்கு படிப்பு சொல்லிதந்து அவங்கள புத்திசாலி ஆக்குறதே எங்களோட நோக்கமே!’’

சரோஜாவின் முகத்தில் சட்டென்று சந்தோஷம் வந்தமர ராகினியின் கர்வம் மெல்ல மெல்ல கரையத்தொடங்கியது.

 குமுதம் 26-12-12 ல் வெளிவந்த எனது ஒரு பக்கக் கதை)
இவன் வேற மாதிரி (ஒரு பக்கக் கதை)



வீட்டோட மாப்பிள்ளையான விஸ்வநாதன் அன்று தனது மகன் இளமதியனை மடியில் வைத்து கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

"டாடி...வாழ்க்கையிங்கறது ஒரு சக்கரம்ன்னு ஸ்கூல்ல மிஸ் சொன்னாங்க...அப்படியின்னா என்ன..? " கேட்டான் இளமதியன்.

"உன்னோட அம்மா பிறந்தப்போ உன்னோட பாட்டி உன் அம்மாவ ஒரு குழந்தையா எப்பிடி பார்த்துகிட்டாங்களோ அது மாதிரி உன் பாட்டி இப்போ நோய் வந்து படுத்தப்போ உன் பாட்டிய ஒரு குழந்தையா நினச்சி உன் அம்மா கவனிக்கிறாங்க, இதுதான் வாழ்க்கைச் சக்கரம்ங்கறது...மாறிகிட்டேயிருக்கும், புரிஞ்சுதா..?"

" டாடி, நீங்க குழந்தையா இருக்குறப்போ உங்கம்மா அதாவது என் பாட்டி உங்கள குழந்தையா பார்த்துக்கலையா..?"

" ஓ...பார்த்துகிட்டாங்களே..!"

" பிறகு ஏன் பாட்டிய நீங்க குழந்தையா பார்த்துக்காம முதியோர் இல்லத்துல கொண்டு போய் விட்டிருக்கீங்க..?"

அவனது கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாமல் தடுமாறினாலும், அம்மாவ வீட்டுக்கு அழைச்சுட்டு வரணும் என்ற எண்ணம் எழ, இளமதியனை வாரி அணைத்து முத்தமிட்டான், தனது அகக்கண்ணை திறந்தமைக்காக...

பொதிகை மின்னல் டிசம்பர் இதழில் வெளிவந்தது.
அவள்

ராஜேஷ்சுக்கு திருமணம் முடிந்து ஒரு வாரம் கழிந்த பிறகே அலுவலகம் திரும்பினான். அவனது மனைவி சஞ்சனா காலைச்சுற்றிய பாம்பைப்போல் அவனையே சுற்றிக்கிடந்தாள்.

அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய ராஜேஷ்சை எதிர்கொண்டு ஹாலில்வைத்தே அவனை இறுக அணைத்தாள்.

ராஜேஷ் சங்கடத்தில் நெளிந்தான். காரணம் டிவி பார்த்துக்கொண்டிருந்த அவனது தங்கை ரமா அதைப்பார்த்துவிட்டாள். அணைப்பிலிருந்த சஞ்சனாவை விடுவித்துவிட்டு எதுவும் நடக்காததுபோல் அறைக்குள் நுழைந்தான்.

காலையில் டைனிங்ஹாலில் ரமா இருக்கும்போது தன்னை விழுந்து விழுந்து கவனித்ததையும் உடம்பை உரசுவதுபோல் நின்றுவிட்டு பரிமாறுவதுமாக இருந்தது அவனுக்கு நினைவு வந்தது.

" நீ ரமா முன்னால அப்படி பண்ணியிருக்க்க்கூடாது, அவ பார்த்துட்டா, எனக்கு ஒரு மாதிரியாயிடிச்சி, அவ முன்னால இப்பிடி நெருக்கமா இருக்கவேன்டாம், புரிஞ்சுதா...!" ராஜேஷ் அவளுக்கு புரியும்படியாகச்சொன்னான்.

" ஏங்க..நான் ரமா பார்க்கணுமுன்னுதான் அப்பிடி நடந்துகிட்டேன். நாம ரெண்டு பேரும் எவ்வளவு சந்தோஷமா இருக்கோம்ங்கிறத அவ தெரிஞ்சிக்கணும், புருஷன் பொஞ்சாதி உறவுங்கறது பாசத்தில பின்னப்பட்ட உற்வுங்கறத அவ புரிஞ்சிக்கணும், கணவன் மனைவிக்குள்ள சின்ன சண்டை வந்ததுக்கு வீட்டவிட்டு கோவிச்சுட்டு நம்ம வீட்டுக்கு வ்ந்திருக்குற ரமா நாம ஒட்டுறதும் உரசுறதுமா இருக்கிறத பார்க்கிறப்போ அவ புருஷன் ஞாபகம் வந்து அவ வீட்டுக்கு போயிடணுமுன்னுதான் அப்பிடி நடந்துகிட்டேன்."

அவளது பதிலைக்கேட்டு ச்ந்தோஷத்தோடே அவளை அணைக்க வந்தவனை "சீ போங்க" என்று தள்ளிவிட்டாள் சஞ்சனா.

 (குமுதம் 29-01-14 இதழில் வெளிவந்தது
வெகுளி



மாமியாரிடம் கோபித்துக்கொண்டு அடிக்கடி பிறந்த வீட்டுக்கு வருவது சரோஜாவுக்கு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.

இரண்டு நாட்கள் அம்மா வீட்டில் தங்கிவிட்டு பின்பு இங்கும் இருக்க பிடிக்காமல் அம்மாவிடம் ஏதாவது வம்பிழுத்துவிட்டு புருஷன் வீட்டுக்கு ஓடுவாள்.

ஒரே வாரத்தில் மீண்டும் ஒரு சண்டை போட்டுக்கொண்டு திரும்பி வருவாள். இதையெல்லாம் பார்த்து பார்த்து அவள் பிறந்த வீட்டினருக்கே அலுத்துவிட்டது.

அன்றும் அப்படித்தான், கோபமும் அழுகையுமாக பிறந்த வீட்டுக்கு வந்தாள் சரோஜா. அவள் அப்பா சுவாமிநாதன் என்ன சண்டை என்றுகூட கேட்கவில்லை. தன் அறையிலேயே முடங்கிக்கிடந்தார்.

"என்னங்க,,,நம்ம பொண்ணு எதுக்கு கோவிச்சுட்டு வந்திருக்கான்னு கேக்கலையா..?" சுவாமிநாதனுக்கு காபி ஆற்றி தந்தபடியே கேட்டாள் அவரது மனைவி சுசீலா.

" பொல்லாத கோவம், மாமியார்கிட்ட சண்டை போட்டுட்டு வந்திருப்பா, ரெண்டு நாள் கழிச்சு தானா போயிடுவா, இவ கதைய நான் எதுக்குடி கேக்கணும் ..?"

" நீங்க நினைக்கிறமாதிரி இந்த தடவ அவ மாமியார்கிட்ட சண்டை போட்டு கோவிச்சுட்டு வரல, மாமியார் சண்டை போடாம உம்முன்னு இருக்காங்களாம், அதனால போர் அடிக்குதுன்னு வந்திருக்கிறா..!"

" அழுவதா சிரிப்பதா என தெரியாமல் விக்கித்து நின்றார் சுவாமிநாதன்


kunkumam 31-01-14
பெருமிதம்


சுந்தருக்கு பெண்ணை மிகவும் பிடித்திருந்தது. இருந்தாலும் சொல்லி அனுப்பறோம் என்ற வழக்கமான பதிலுடன் வெளியேறினார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து பெண்ணை தனியாக சந்தித்து பேசிய சுந்தர் ஒரு முடிவுக்கு வந்தான்.

" சாரிப்பா..இந்த பொண்ணு வேண்டாம்..!"

" டேய்..அண்ணைக்கு பொண்ண புடிச்சிருக்குன்னு சொன்ன..? அதுவுமில்லாம நாற்பது பவன்நகையும் ஐந்து லட்சம் ரொக்கமும் தர்றதா சொன்னாங்க, அப்பறம் ஏன் வேண்டாம்ங்கற,,!" புரியாமல் கேட்டார் அப்பா.

"அப்பா, அண்ணனுக்கு போனவருஷம் திருமணம் பண்ணினப்போ நாம எதுவும் கேக்கலையின்னாலும் முப்பது பவன் நகை, மூணு லட்சம் ரொக்கமுன்னு அண்ணிக்கு சீர் செஞ்சாங்க, இப்ப இவங்க கூடுதலா சீர் செஞ்சு திருமணம் பண்ணி வெச்சா ரெண்டு மருமகள்கிட்டயும் ஒரு ஏற்றத்தாழ்வு வரும். அதனால நேத்து அந்த பொண்ணோட வீட்டுக்குப்போய் நீங்க முப்பது பவன் நகை, மூணு லட்சம் ரொக்கம் மட்டும் செய்தா போதும்னு சொன்னேன், அந்த பொண்ணு கேட்கல, நான் மூத்த மருமகளவிட ஒரு படி மேல இருக்க விரும்பறேன்னு பிடிவாதமா சொல்றா, அப்படிபட்ட பொண்ணூ எனக்கு தேவையில்லப்பா..!"

சொல்லிவிட்டு அலுவலகம் புறப்பட்ட தனது மகனை தட்டி அணைத்தார் அவனது அப்பா. அந்த அணைப்பில் பெருமிதம் நிரம்பி வழிந்தது.

 07-02-2014 குங்குமம் இதழில் வெளிவந்தது) 
9
எதிர்பார்பு (ராணி 23-03-14)

சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கதிரேசன் ஊரிலிருக்கும் அவனது அம்மா அப்பாவை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக்கொள்ள தீர்மானித்தான்.

அவன் தங்கியிருந்த வீட்டில் ஏசி, வாட்டர் கீட்டர், டீ.வி. பிரிட்ஜ், வாஷிங்மெஷின், கேஸ் அடுப்பு போன்ற சகல வசதிகளை செய்து வைத்துவிட்டு அவன் அம்மா அப்பாவை அழைத்து வந்தான்.

முதல் நாள் அவன் அம்மா கையால் சமைத்து சாப்பிட்டுவிட்டு ஆகா ஓகோவென்று பாராட்டினான். மறுநாள் வழக்கம்போல வேலைக்குச்சென்று இரவு பதினொன்று மணிக்கு வந்து மறுநாள் காலை ஐந்து மணிக்கு எழுந்து வேலைக்கு போய்விட்டான்.

ஒரு வாரம் ஓடிப்போனது.

" நாங்க ஊருக்குபோறோம்!" அவன் தந்தையும் தாயும் சொன்னபோது கதிரேசன் அதிர்ந்தான்.

" அப்பா, இங்க என்னப்பா குறையிருக்கு, சகல வசதிகளோட சந்தோஷமாத்தானே இருக்கீங்க அப்பறம் ஏன் ஊருக்கு போறோம்னு சொல்றீங்க?" சற்று மிதமான
கோபத்தில் கேட்டான் கதிரேசன்.

" நீ எங்களுக்கு எல்லா வசதிகளையும் செஞ்சு வெச்சது சரிதான், ஆனா நாங்க எதிர்பார்க்கிறது இந்த வசதிய இல்ல, வயசான காலத்துல நீ எங்ககூட தினமும் ஒருமணி நேரமாவாது சந்தோஷமா பேசி நேரத்த செலவளிக்கற அந்த தருணத்ததான், அது உன்கிட்டயிருந்து கிடைக்கல!" சுருக்கென்று வலித்தது அவரது வார்த்தைகள் கதிரேசனுக்கு.

" என்ன மன்னிச்சிடுங்கப்பா!" என்று அவர்கள் காலில் விழுந்தவன் வேறு வேலை

தேடுவது என்ற முடிவோடு எழுந்தான்.
பெயர்கள் (குமுதம்)
09-04-14

“ அம்மா, அப்பா கதை எழுதுறப்போ கதாபாத்திரங்கள் பெயர்கள் எல்லாம் பழைய காலத்து பெயராவே இருக்கு, மாடர்னா பேரு வைக்கவே மாட்டேங்கிறாரு,!” நக்கலாய் சொன்னாள் நந்தினி.

“நானும் பலவாட்டி சொல்லியிருக்கேன், ஸ்டையிலா பெயர் வையுங்கன்னா கேட்கவே மாட்டேங்கறாரு, அவருக்கு பிடிச்சதெல்லாம், காமாட்சி, விசாலாட்சி, பங்கஜம், ஆம்பளப் பேருன்னா நேசையன், பொன்னுமணி, மாணிக்கம்..!” மகளோடு சேர்ந்து வாசுகியும் கிண்டல் செய்ய துவங்கினாள்.

~ஏம்பா..இப்பிடி பெயர்கள் செலக்ட் பண்றீங்க..?” வெடுக்காய் கேட்டாள் நந்தினி.

“மாடர்ன் பேரு எனக்கு தெரியாம இல்ல, நான் பேரு தேர்வு செய்யிறதெல்லாம் எங்க கிராமத்து உறவுக்காரங்க பேர்கள் தான். ஒருவேள என்னோட கதைகள் தேர்வாகி அது வெளிவந்து உறவுக்காரங்க யாராவது அத வாங்கி படிக்குறப்போ, இவன் இன்னமும் நம்மள மறக்கலன்னு நினைப்பாங்க இல்லையா.. அதுக்காகத்தான் அந்த மாதிரி பேர்கள் பயன்படுத்துறேன்..”

அவர்களது உணர்வுகளை புரிந்துகொண்டவளாய் “இனிமே அப்பிடியே பெயர்கள் செலக்ட் பண்ணுங்கப்பா…” நந்தினி சொல்ல அவளோடு சேர்ந்து தலையாட்டினாள் வாசுகி,