Thursday, February 18, 2010

தாய்ப்பாசம்

கல்லாவில் அமர்ந்திருந்த ஓட்டல் முதலாளியின் முன்பு கைகட்டி நின்றான் பத்து வயது சிறுவன் சுப்ரமணியன்.

" ஐயா, அம்மாவும் நானும் சாப்பிடுறதுக்கே ரொம்ப சிரமப்படுறோம். இந்த ஓட்டல்ல எனக்கொரு வேலை போட்டு குடுத்தீங்கன்னா என் அம்மாவ கண்கலங்காம காப்பாத்துவேன்ங்கய்யா!" அடக்கமாகச் சொன்ன சுப்ரமணியனை ஏற இறங்கப் பார்த்தார் ஓட்டல் முதலாளி.

பள்ளிக்கூடம் போக வேண்டிய வயதில் ஓட்டல் வேலை செய்ய விரும்பும் சுப்ரமணியன் மீது இரக்கம் பிறந்தது அவருக்கு.

" இந்தாப்பா, இந்த ஓட்டல்ல நிறைய பெண்கள் வேலை செய்யறாங்க, நீ போய் உன் அம்மாவ வேலைக்கு வரச்சொல்லு, நீ பள்ளிகூடம் போ, உன்னோட படிப்புச்செலவ நான் ஏத்துக்கிறேன்!" அவரது வார்த்தைகளைக்கேட்ட சுப்ரமணியனின் முகம் சுருங்கியது.

" ஐயா படிப்பு இல்லாட்டிப்போனா எதிர்காலத்துல அனுபவத்துல கத்துத்தெரிஞ்சுக்கிடுவேன், ஆனா என் அம்மாவ கஷ்டப்படுத்தி அதுல நான் படிக்க விரும்பல, நான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல, என் அம்மாவ உட்கார வெச்சு சோறு போடுவேன், வர்றேன் ஐயா!" சொல்லிவிட்டு பதிலுக்கு கூட காத்திருக்காமல் விறுவிறுவென்று நடந்தான்.

குமுதம் 24.02.10

No comments: